ஆயிரம் குறள்கள் இனிக்கட்டும்

  • அகரம் முதலென சொல்லி அடிவைத்தான்
    சிகரம் நீஉயரென செல்ல படிகொடுத்தான்
    மூத்த மொழியின் பொய்யாமொழி – அறம்
    காத்த வழியின் நீயும் அன்பைப்பொழி

  • வாசுகி தலைவன் வாசகங்கள்; அழைக்குது
    வா சுகி என் வாசங்கள் ! மணற்கேணி
    அள்ள அள்ள ஊறட்டும் – மணிநாழி
    மெள்ள மெள்ள அன்று ஓடட்டும்

  • அன்பிற்கும் அடைக்குந்தாழ் எங்குமில்லை – நற்
    பண்பிற்கும் ஒடுக்கும்சூழ் வருவதில்லை ; சிறு
    முயற்சி திரு வினை யாக்கும் – இந்த
    பயிற்சி பெரும் வான்புகழ் சேர்க்கும்!

  • தேனென குறள்கள் செவி பாயும் – புது
    தேநீர் சூடோடு என் வயிறு சேரும்;
    வான்மறை பாக்கள் இசைபாடும் – பூத்த
    வாகைமலர் மாக்கள் தலைசூடும்!

  • அறத்தோடு வந்த பொருள் இன்பமாம்-குறள்
    கருத்தோடு வந்து பிள்ளைகள் சொல்லுமாம்!
    காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்;என்
    காப்பிக் குவளை கவிழ்த்து மகள் சிரிக்கும்

  • வெண்பால் பருக நாளும் பிடிவாதம் – குறள்
    வெண்பா ருசிக்க நாவும் பிடிமானம்
    வெண்பால் காதல் வளர்ந்து மறந்துவிடும்
    முப்பால் மூப்பால் தளர்ந்து மலர்ந்துவரும்

  • எண்ணம் கொண்டு கருமம் துணி – தங்கக்
    கிண்ணம் கோப்பை பரிசென அணி;
    தடுக்கிய படி உன்னை செதுக்கட்டும்
    அடுக்கிய கோடி அள்ளி கொடுக்கட்டும்

  • எண்எழுத்துக்கள் உன்திகழ் கண்ணாகட்டும்
    பொன்எழுத்துக்கள் நின்புகழ் விண்பாடட்டும்
    மெய்பொருள் காண்பதன்றோ நம் அறிவு?
    பொய்பொருள் கண்டதும் நீயும் புறம்தள்ளு

  • கோடையை தாண்டிய வாடையிது – இளங்
    குளிரும் கொஞ்சம் துளிருது – வளர்
    மரங்களில் இலைகள் உதிர்கிறது – இளம்
    மனங்களில் அலைகள் முதிர்கிறது!

  • ஞாயிற்றுக்கான தமிழ் திருச்சபைதான்
    ஞானத்திற்கான முதல் திருப்படிதான்
    ஞாட்புக்கான மகிழ் புதுநிலைதான்
    ஞாலத்திற்கான புகழ் பொதுமறைதான்!

  • தம்நெஞ்சத்து கடிகொள்ளட்டும் பலர்-ஊட்டி
    உம்நெஞ்சத்து குடிகொள்ளட்டும் குறள்;
    ஈன்றபொழுது பெரிதுவக்கும் அன்னை-போட்டி
    ஆன்றபுகழ் உச்சிசேர்க்கும் உன்னை!

  • ஆயிரம் ஆண்டுகள் கடந்த காதல் இது
    ஆயிரம் மைல்கள் கடந்த காதல் இது
    ஆயிரம் குரல்கள் ஒலிக்கட்டும் – அதில்
    ஆயிரம் குறள்கள் இனிக்கட்டும்

2022













ஆயிரம் குறள்கள்
இனிக்கட்டும்!
This entry was posted in tamil and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


three × = 27