அது இரண்டாம் நூற்றாண்டு .
காலத்தின் தலைசிறந்த அந்த புலவருக்கு இடி என்று ஒரு செய்தி வந்து இறங்குகிறது. தன்னுடைய நெருங்கிய தோழன் மன்னாதி மன்னன் போரில் மாண்டான் எனும் செய்தி ! மார்பில் அடித்துக் கொண்டு அழுகிறார் அந்த புலவர். தேற்றுவதற்கு யாரும் அருகில் இல்லை. எப்பேர்ப்பட்ட நட்பு அது! மன்னனாகவா தன்னிடம் நடந்து கொண்டான்? நினைவுகளை அசை போடுகிறார் அந்த புலவர். கதறிக் கதறி அழுகிறார்.
ஒரு நாள் மாலை வேளை கடற்கரையோரம் தனிமையில் சுவைமிகுந்த கள் பருகிக்கிடந்தேன்! வெறும் கள் மட்டுமா? கூடவே சுவையூட்டும் கருவாடும்! அடடா என்ன ஒரு சுவை! உன் நினைவு வந்துவிட்டது! ஓடோடி வந்தேன், மறுநாள் அரசவைக்கு !
அரசவைக்கு நாம் வருவதாக இருந்தால் அதை முன்கூட்டியே அறிந்து பணிப்பெண்களுக்கு உத்தரவிட்டு சுவை கள்ளை எடுத்து தயாராக வைத்திருப்பாய், அல்லவா? சிறிதளவே இருந்தாலும் நல்ல கள் என்றால் அது எனக்கு மட்டுமே அல்லவா கொடுப்பாய். பெரிய அளவில் கள் இருந்தால் அதை நாம் இருவரும் சேர்ந்து அனுபவிப்போம்.. கொஞ்சம் சுவை கள் ! கொஞ்சும் தமிழ் சொல்!
இனி யார் எனக்கு நல்ல கள் ஊற்றிக் கொடுப்பார் ?
குடிப்பதற்கு வெறும் கள் மட்டுமா கொடுப்பாய்? இல்லை. நீ வேட்டையாடிய அத்தனையும் எனக்கல்லவா பரிசளிப்பாய்? சோறும் கறியும் கொள்ளும்பொழுது எலும்பு ஏதாவது இருந்தால், அதை நீ எடுத்துக் கொண்டு கறியை மட்டும் எனக்கு கொடுப்பாயே ! இனிமேல் யார் இப்படி இருப்பார்?
கறி கவுச்சி வீசும் என் தலையை பூவாசம் வீசும் உன் கையால கோதிவிடுவியே!
சிறிய கள் பெறினே, எமக்கு ஈயும்; மன்னே! பெரிய கள் பெறினே, யாம் பாட, தான் மகிழ்ந்து உண்ணும்; மன்னே! சிறு சோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே! 5 பெருஞ் சோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே! என்பொடு தடி படு வழி எல்லாம் எமக்கு ஈயும்; மன்னே! அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும்; மன்னே! நரந்தம் நாறும் தன் கையால், புலவு நாறும் என் தலை தைவரும்; மன்னே! - எட்டுத்தொகையுள் எட்டாவதாகிய (புறநானூறு:235)
உன்னோடு செலவிடும் நேரமும் எவ்வளவு அற்புதமானது. பெண்களை வர்ணிப்பதிலும் அவர்களை ரசிப்பதிலும் உன்னை விடவும் வேறு ஒருவர் இந்த உலகில் உண்டா? எப்படியெல்லாம் கவிபாடுகிறாய் ? வளைந்து பரந்த இடை? அதில் பொலிந்த மணி இழை! இளம்பேதை! மை தீட்டிய அந்தக் கண்கள் தான் எவ்வளவு கூர்மையாக உள்ளது? வாள்போல் வளைந்த பளபள நெற்றி!
இழையணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்
மடவரல் உண்கண் வாள் நுதல் விறலி (புறநானூறு: 89)
நீ உண்மையில் புலவனா அல்லது புரவலனா என்ற சந்தேகம் எனக்கு வந்து விடும். இனி யார் உன் போல் இப்படி என்னுடன் பொழுதைக் கழிக்க வருவார் ? உன்னோடு கழித்த ஒவ்வொரு நாட்களும் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் தமிழிலக்கியம் கொண்டாடும்.
எப்படி வாழ வேண்டி நினைத்தேன்? பூவும் பொன்னும் மேனியெங்கும் சூட, கலையழகு பெண்கள் சூழ, பொன்கலத்தில் சுவையான கள் அவர்கள் ஊற்றிக்கொடுக்க, குடித்து, களித்து கேட்ப்பவருக்கெல்லாம் அள்ளிஅள்ளி வீசி கொடுத்தல்லவா வாழ வேண்டும் .
“பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து
பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
நாரறி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து,
இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி,
வாழ்தல் வேண்டும்” – (புறநானூறு : 367)
நட்பே, இனி யார் என் துணை ?
Quiz time:
- பாடப்பெற்ற மன்னன் யார்?
- பாடல் பாடிய புலவர் யார்?
- பாடல் கூறும் இளம்பேதை யார்?