தேவதை ஒருத்தி யாசிக்கிறாள்!


❖ தேவதை ஒருத்தி யாசிக்கிறாள் !
    தேகம்வதை உருகி சுவாசிக்கிறாள்
    திரும்ப திரும்ப தட்டுகிறாள்
    தெருவே கதவை திறக்கவில்லை

❖ மாட்டை கூடி கும்பிடுவோம்
    மகளை தூரம் தள்ளிடுவோம்
    கண்ணை மூடி கடந்திடுவோம்
    கடவுள் சித்தம் ஒதுங்கிடுவோம்

❖ புனிதம் மிக்க நகரமாம் – மதம்
    புழுத்துப்போன நரகமாம்; அது
    பொசுங்கி சாம்பாலாய் போகட்டும்
    நசுங்கி நாசமாய் ஆகட்டும்!

❖ பெண்ணை ஊர்வலமாய் இழுத்தோம்
    பிறப்பை கீழ்த்தரமாய் சிதைத்தோம்
    கேட்பதற்கு இங்கு நாதியில்லை
    கிடைப்பதற்கு ஒரு நீதியில்லை

❖ அம்மன்நீ என்றும் சொல்லுவோம்
    அம்மணம் செய்தும் கொல்லுவோம்;
    அன்புணர்ச்சிக்கு சிரிதும் ஆளில்லை
    வன்புணர்ச்சிக்கு பெரிய வரம்பில்லை

❖ அபலைகள் அழுகை ஓய்வதில்லை
    முதலைகள் கண்ணீர் வடிவதில்லை
    ஆண்டவன் காது கேட்பதில்லை
    ஆள்வபன் காவி – வக்கில்லை;

❖ சாதிக்க யாரும் பிறக்கவில்லை
    சாதிக்கு மட்டும் பிறக்கிறோம்
    மனதை சாதியில் பூட்டினோம்
    மலத்தை வாயில் ஊட்டினோம்

❖ கொடியவர்களினும் கொடியவர்கள்
    கொடுமைகள் கேளா சாட்சிகள்;
    கயவர்களினும் பெரும் கயவர்கள்
    கண்டும்காணா கடக்கும் கசடுகள்

❖ மாநிலம் பற்றி எரியட்டும் – அதில்
    மானுடம் செத்து மடியட்டும்
    பாழும் மண் எனதாகும் – அங்கு
    பாவம் பெண் பிறப்பாகும்!

❖ மதம் சாதி மயிராகட்டும்;
    மனிதம் நீதி உயிராகட்டும்;
    மயிர் மழித்து கழிப்போம்
    உயிர் பிடித்து தழைப்போம்

2023

தேவதை ஒருத்தி யாசிக்கிறாள்!

This entry was posted in Uncategorized and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


seven − = 4